search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜா முத்தையா"

    ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #AnnamalaiUniversity
    புதுடெல்லி:

    தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

    ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமீரா பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சிவபாலன், கல்லூரி தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதி யு.யு.லலித் விடுப்பில் இருந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார்.

    தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக முடிவு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் கிடையாது. கல்லூரி நிர்வாகம் 2 வாரத்தில் அனைத்து கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த குழு ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அதே தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். ஏற்கனவே கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு இருந்தால் 2013-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு நடப்பு ஆண்டுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SupremeCourt #AnnamalaiUniversity #tamilnews 
    ×